கோவை மாவட்டம், செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹெவுசிங் யூனிட் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு சஞ்சய், கோவை தீத்திபாளையம் அருள் நகரைச் சேர்ந்த ஜலாலுதீன், கோவை இடையர்பாளையம் பி.என்.டி காலனியைச் சேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் என்பதும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அந்த கும்பலில் இருந்து சஞ்சய் குமாரை போலீசார் சோதனை செய்த போது ஒரு கை துப்பாக்கி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் அதில் பிடிபட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும்,
கடந்த ஆண்டு சஞ்சய் ராஜ பசுபதி பாண்டியன் என்பவரை ஆவாரம்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், சஞ்சய் ராஜ தற்பொழுது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. தற்பொழுது இந்த கும்பலுக்கு இடையூறாக பொன்குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது.

அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தி சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுஸ்சிங் யூனிட்டை சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சஞ்சய் ராஜ், காஜா உசேன் ஆகியோர் மூளையாக செயல்பட்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற சதி செய்ததாக கூறப்படுகிறது.
எனவே இந்த வழக்கிலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர், கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.