காரமடை அருகே உள்ள சென்னி வீரம் பாளையம் கிராமத்தில் தனியார் சிப்ஸ் கம்பெனியில் அமோனியா கேஸ் கசிவு காரணமாக பொதுமக்கள் திடீர் மயக்கம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், அடுத்த மேட்டுப்பாளையம் காரமடை அருகே சென்னி வீரம்பாளையத்தில் செயல்படாத உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறந்து சிப்ஸ் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய அமோனியா கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த அமோனியா கேஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் பரவியது.

குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் அமோனியா வாயு கசிவு திடீரென ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டதால் அச்சமடைந்துள்ளனர்.
அப்போது வீடுகளை விட்டு வெளியேறி சற்று தொலைவில் உள்ள கோவில் மற்றும் சாலையில் தஞ்சமடைந்தனர். தகவல் அறிந்த காரமடை போலீசார் மற்றும் 108 மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு மூச்சு திணறல் ஏற்பட்ட பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் வாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் போலீசார் மற்றும் துறை சார்ந்தவர்கள் வாயு கசிவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.