ஜம்மு பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த காரைக்கால் ராணுவ வீரர் உயிரிழப்பு 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், அடுத்த திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 32. இவர் கடந்த 11 ஆண்டு காலமாக இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையின் 47 படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் செவ்வந்தி என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் பிரேம்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா, சீனா எல்லை மலை பகுதியில் பணியில் இருந்து போது திடீரென்று உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பிரேம்குமார் உடல் நேற்று மாலை விமானம் மூலமாக சென்னை வந்தடைந்து இரவு சொந்த ஊரான திருப்பட்டினம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் வெங்கட கிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் அரசு சார்பில் ராணுவ வீரர் பிரேம்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அவரது உடலுக்கு ராணுவத்தினர் சார்பில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அதை தொடர்ந்து போலகம் கட்ட பிள்ளை மரக்காயர் தோட்டத்தில் அவரது உடலுக்கு 24 குண்டுகள் முழங்க ராணுவத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக ராணுவத்தின் சார்பில் தேசியக்கொடி மறைந்த ராணுவ வீரரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மயானத்தில் பிரேம்குமார் உடலுக்கு அவரது மகன் இறுதி சடங்கு செய்து ஏரியூட்டப்பட்டது. ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.