கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு. 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுறுத்தினர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தற்போது சிகிச்சையில் இருப்பவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்றவர்களை காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை. காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளனர். அதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.