கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி தொடர்பாக அண்ணாமலை போன்றவர்கள் சிபிஐ விசாரணை கேட்பதற்கான நோக்கம் தெரிகிறது.
அவர்களது ஆட்கள் யாராவது இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? அவர்களை காப்பாற்றுவதற்காக சிபிஐ விசாரணையை கேட்கிறாரா? ஒன்றிய அரசு நினைத்தால் ஒருவர் மீது ஈடி, சிபிஐ சோதனை, அவர்கள் பாஜகவில் இணைந்தால் சோதனை நிறுத்தம் என செயல்பட்டு வருகிறது. சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடைபெற்ற வருகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடியும் விசாரணை ஆணையமும் விசாரிக்கிற போது நியாயமாக இருக்கும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
எந்த முதலமைச்சரும் சட்டமன்றத்தில் சொல்லாத வகையில் எதிர்க்கட்சியினரே வாருங்கள் பதில் கூறுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்தார். ஆனால் வரவில்லை. நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்து விட்டது. இதற்கு பிறகு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிவில் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும். எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும்? ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கும்பகோணம் மகாமகத்தில் 100 பேர் உயிரிழந்தனர். ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?
அதிமுக ஆட்சியில் சாராயம் குடித்து உயிரிழப்பின் போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? சும்மா அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம், மெத்தனால் வந்தது பாண்டிச்சேரியில் இருந்து தான். அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அதனால் பாண்டிச்சேரி முதலமைச்சரை அண்ணாமலை ராஜினாமா செய்ய சொல்வாரா? குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது, நூற்றுக்கணக்கானோர் சாராயம் குடித்து இறந்தனர். அப்போது மோடி ராஜினாமா செய்தாரா?
பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அண்ணாமலை போன்றவர்கள் செய்த சதியாக இருக்கலாம் என்று என்னை போன்றவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்தவர்களை கூண்டோடு பணி இடை நீக்கம் செய்துள்ளார். இதற்கு முன்பு இதுபோல் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்றால் அதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா? யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா? இது சதியா என்பது விசாரணையில் தான் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.