தமிழ்நாட்டில் பழைய ஒய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 ஆயிரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைதாகினர்.
தமிழ்நாட்டில் பழைய ஒய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துதல், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு. அன்பரசு, அ. மாயவன், கு. வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகம் முன்னர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

இதற்கிடையே ஜாக்டோ – ஜியோ போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக டி.பி.ஐ வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து அருகே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். முன்னதாக ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
நியாயமான கோரிக்கைகளை கூட செய்து தராத தமிழக அரசை கண்டித்து, தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனில், மக்களவைத் தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவோம். அப்போது போராட்டங்களுக்கு ஆதரவுகோரி அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்பின் மாவட்ட அளவிலான வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு பிப்ரவரி 10-ம் தேதியும், ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் பிப்ரவரி 15-ம் தேதியும் நடத்தப்படும். பின்னர் நிறைவாக பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் எந்தவிதமான பின்வாங்குதலும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 12 ஆயிரம் அரசு ஊழிர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாக்டோ – ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.

அவர்களை நிபந்தனையின்றி விடுவிப்பதுடன், அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுதொடர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.