முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி ‘தேவையற்ற சட்டம்’ என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது நியாயமா? நீதியா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாக்களை ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதையடுத்து, நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, மீண்டும் அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

“1994ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு, ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது அன்றைய அ தி மு க அரசு.
மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், தி மு கழகத்தின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது” என்று தி மு க வின் முன்னாள் தலைவர் கருணாநநிதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 30, ஜூலை 1996ம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வி துறை அமைச்சரும், தி மு க வின் நீண்ட கால பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அ தி மு க கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.