புதுச்சேரி சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை முழு விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்பு குழுவினர் விசாரணையை துவங்கி உள்ளனர்.
குற்றவாளிகளின் வீடுகளுக்கு தடய அறிவியல் துறையினர் சென்று தடயங்களை சேகரித்தனர். புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமி, 4 நாட்களுக்கு பின் அவரது வீட்டுக்கு அருகே கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.
அப்போது சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு புதுவை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மறியலால் மாநிலமே ஸ்தம்பித்தது. மேலும் சிறுமியின் படுகொலைக்கு தேசிய, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதை அடுத்து கொடூர சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் வயது (57), கருணா (எ) கருணாஸ் வயது (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மரில் பிரேத பரிசோதனை நடத்திய பின் நேற்று முன்தினம் சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் சிறுமியின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் கொலை சம்பவத்தில் வேறு யாகுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க டிஐஜி பிரிஜேந்திரகுமார் யாதவ் மேற்பார்வையில் ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் எஸ்பி லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் கணேஷ், எஸ்ஐ சிவப்பிரகாசம ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் நேற்று தனது விசாரணையை துவங்கினர்.
சிறுமி கொலை வழக்கில் கைதாகியுள்ள விவேகானந்தன், கருணா (எ) கருணாஸ் மற்றும் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்திற்குள் இருக்கும். மேலும் 5 சிலரின் குதிகால் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை நடந்ததாக கூறப்படும் விவேகானந்தன் வீட்டுக்கு தடய அறிவியல் துறை அதிகாரிகளுடன் சென்ற சிறப்பு தனிப்படை குழுவினர் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கருணாஸ் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்பி கலைவாணனிடம் நிருபர்கள் கேட்டபோது. முதல்கட்ட விசாரணை முடிந்து அடுத்தகட்ட விசாரணையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த வழக்கில் இது வரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.