ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அகமதாபாத்தில் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த 13 வது உலகக்கோப்பை போட்டியுடன் டிராவிடின் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
டிராவிடின் வழிகாட்டுதலில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்ததுடன் பல்வேறு சர்வதேச தொடர்களில் வெற்றி வாகை சூடியது. இருப்பினும் ஐசிசி போட்டியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2022-ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் இங்கிலாந்துயிடம் வீழ்ந்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2-வது இடம் பெற்றது.

அண்மையில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவியை டிராவிட் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகுல் டிராவிட் இந்திய அணிக்குள் உருவாக்கிய கலாச்சாரத்தை தொடர வேண்டும். புதிய பயிற்சியாளரை நியமித்தால் அணியின் கட்டமைப்பில் பாதிப்பு வரலாம் என்று கருதியே இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் தொடர வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. டிராவிட்டும் பயிற்சியாளர் பணியில் தொடர சம்மதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அவரது பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தது அடுத்த ஆண்டு 2024 ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரை நீடிப்பார் என்று தெரிகிறது.

தலைமை பயிற்சியாளர் பதிவு நீட்டிப்பு பெற்றிருக்கும் 50 வயதான டிராவிட் கருத்து தெரிவிக்கையில் இந்திய அணியினருடான கடந்த 2 ஆண்டு காலம் மறக்க முடியாது. ஒன்றாக நாங்கள் ஏற்றத்தாழ்வுகளை கண்டு இருக்கிறோம். இந்தப் பயணம் முழுவதும் அணியினருக்குள் இருந்த ஆதரவும்,தோழமையும் தனித்துவம் ஆனது. வீரர்கள் உடைமாற்றும் அறையில் நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் கலாச்சாரம் உண்மையிலேயே பெருமை கொள்ளத்தக்கதாகும். வெற்றியோ தோல்வியோ உறுதியான மனநிலையுடன் இருப்பது தான் எங்களது பண்பாடாகும். நமது அணியின் தரமும், திறமையும் மகத்துவமானது.
இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது தொலைநோக்கு பார்வைக்கு ஒப்புதல் மற்றும் ஆதரவு அளித்ததற்காகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயிற்சியாளர் என்றால் நீண்ட நாட்கள் வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டியது இருக்கும். இதனைப் புரிந்து கொண்டு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் எனது குடும்பத்தினரின் ஆதரவையும், தியாகத்தையும் மனதார பாராட்டுகிறேன். திரைக்குப் பின்னால் உள்ள அவர்களது பங்களிப்பு விலைமதிப்பற்றது. உலக கோப்பைக்குப் பிறகு எங்களுக்கு புதிய சவால்கள் உள்ளன. அதனை ஏற்று நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.