விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் பழனி தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ அமைச்சர் மஸ்தான் மற்றும் மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன், கட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன், மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், ஆரணி எம்.எல்.ஏ ராமச்சந்திரன், எக்மோர் எம்.எல்.ஏ பரந்தாமன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோர் வழுதரேட்டி ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுமான பணிகள், கோலியினூர் மேல்நிலைப்பள்ளி, பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி, மேல்சித் தாமூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம், வீடூர் அணை உள்ளிட்டவர்களை ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ கூறியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மதிப்பீட்டுக் குழு பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது வழுதரெட்டி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோலியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் வகுப்பறை கழிவறை குடிநீர் வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையினை நாள்தோறும் தூய்மையாக வைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூபாய் 60 கோடியில் இரண்டு வகையான கட்டிடங்களின் கட்டுமான பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இடவசதியின்மையால் இப்பகுதி மக்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு செல்கின்ற நிலை இருந்து வந்தது. அமைச்சரின் முயற்சியால் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இப்புதிய கட்டிடத்தின் மூலம் மக்கள் மட்டுமில்லாமல் மற்ற பகுதியினை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று செல்லும் அளவிற்கு தேவையான இட வசதி மற்றும் மருத்துவ வசதி உள்ளது. இதன் மூலம் 400 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் அளவிற்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைக்கு தேவையான குடிநீர் வசதிகள் நகராட்சியின் சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். பொதுமக்கள் எவ்வித சிரமம் இன்றி மருத்துவ வசதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திண்டிவனம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்ட ஆய்வு செய்து உடன் அங்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. இத்னை தொடர்ந்து வழுதரெட்டியில் 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளுக்கு 1.12 ஹெக்டர் பரப்பளவில் ரூபாய் 5.70 கோடியில் மணி மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினர். அப்போது சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனுவாசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, நகர செயலாளர் சக்கரை ஆகியோர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.