விழுப்புரம் மாவட்டம், அடுத்த கண்டாச்சிபுரம் அருகே விவசாய நிலத்தை அபகரித்து, ஆக்கிரமிப்பு செய்த பாஜக மாவட்ட தலைவரை கண்டித்து விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். அப்போது முதியவர் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம், அடுத்த கண்டாச்சிபுரம் அருகே வடகரைத்தாழனூர் அருகே உள்ள கடகால் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சாதிபதி என்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவர் கூறுகையில், எனக்கு சொந்தமாக 1¾ ஏக்கர் நிலம் கடகால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் 51 சென்ட் நிலத்தை பாஜக மாவட்ட தலைவராக உள்ள கலிவரதன் ஆக்கிரமிப்பு செய்து மீன் குட்டை அமைத்துள்ளார்.

அந்த ஆக்கிரமிப்பை அகற்றி எனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பொது கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த வித பயனும் இல்லை.
எனவே என்னுடைய சொந்த நிலத்தை ஆக்கிரமித்த பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும். பின்னர் தீர்வு காணாத விரக்தியில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து போலீசார் அறிவுரைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் லட்சாதிபதி மனு அளித்து விட்டு சென்றார். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.