புதுச்சேரியில் பெண் குழந்தையை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது..!

3 Min Read

புதுச்சேரி கடற்கரையில் கடத்தப்பட்ட நரிக்குறவ பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ரூ.1.5 லட்சம் விலை பேசி குழந்தையை கடத்திய காரைக்கால் பெண் மற்றும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டி வயது (26). நரிக்குறவரான இவர், கடந்த 14-ம் தேதி இரவு 8.30 மணியளவில் கடற்கரை சாலை நேரு சிலை பின்புறமுள்ள காலி இடத்தில் மனைவி விஜயலட்சுமியுடன் பப்புள்ஸ், பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

புதுச்சேரியில் பெண் குழந்தையை கடத்தல்

அவர்களது 3 பிள்ளைகளும் அங்கு விளையாடி கொண்டிருந்தது. அப்போது அவர்களது 4 வயது குழந்தை சனல்யாவை திடீரென காணவில்லை. பின்பு எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து முத்துபாண்டி பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் குழந்தை கடத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சீனியர் எஸ்.பி. சுவாதி சிங் வழிகாட்டலின் பேரில், கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜானியா மேற்பார்வையில் பெரியகடை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனசெல்வம், ஏஎன்எஸ் டீம் இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

புதுச்சேரியில் பெண் குழந்தையை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது

அப்போது குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கின. அப்போது போலீசார் சம்பவ இடத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் மூர்த்தி வயது (20) என்பவர் சிக்கினார்.

அவரை பிடித்து விசாரித்ததில், அவரும், கூட்டாளியான புதுச்சேரி பூமியான்பேட்டை அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்த எண்ணெய் கடையில் வேலை செய்யும் ஆகாஷ் வயது (19) என்பவருடன் சேர்ந்து, காரைக்கால் அம்பகரத்தூர் பெரியகடை தெருவை சேர்ந்த ஷர்புதீன் மனைவி ஜகபர் நாச்சியார் வயது (39) என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

காரைக்கால் காவல் நிலையம்

குழந்தையை கடத்தி கொண்டு வந்து கொடுத்தால் ரூ.1.5 லட்சம் பணம் தருவதாக கூறி, அதற்கு அட்வான்சாக ரூ.10 ஆயிரம் கொடுத்ததால், பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையை கடத்தி சென்று ஜகபர் நாச்சியாரிடம் கொடுத்துள்ளனர்.

குழந்தை கடத்தலில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கணவர் இல்லாத நிலையில் ஜகபர் நாச்சியார், நாகூர் மற்றும் புதுச்சேரிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

மெரினா காவல் நிலையம்

நாகூர் பகுதியில் குழந்தை இல்லாத தம்பதியர் சிலர், குழந்தை வேண்டும் எனவும், அதற்கு அதிக பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். சட்டப்படியே குழந்தையை தத்தெடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால், ஜகபர் நாச்சியார், குழந்தையை பணத்துக்காக கடத்தி, அவர்களிடம் விற்க முயன்றுள்ளார்.

புதுச்சேரிக்கு அவ்வப்போது வரும் போது இங்குள்ள தோழி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த தோழி மூலமாக மூர்த்தி, ஆகாஷ் ஆகியோருடன் ஜகபர் நாச்சியாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, ரூ.1.5 லட்சம் பேசி, ரூ.10 ஆயிரம் முன்தொகை கொடுத்து குழந்தையை கடத்தி வர கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பெண் குழந்தையை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது

அதன்படி, சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்களும் குழந்தையை கடத்தியுள்ளனர். பின்னர், மூர்த்தி மட்டும் அந்தோணியார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து குழந்தையுடன் பேருந்தில் ஏறி, காரைக்காலுக்கு சென்று, ஜகபர் நாச்சியாரிடம் கொடுத்துள்ளார்.

சிசிடிவி கேமரா பதிவு, செல்போன் லொகேஷன் மூலமாக அடையாளம் கண்டு, 2 பேரையும் காரைக்கால் போலீஸ் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு பிடித்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர், குழந்தையை புதுச்சேரிக்கு கொண்டு வந்து, மருத்துவ பரிசோதனைக்குப்பின், பெற்றோரிடம் நேற்று காலை ஒப்படைத்தனர்.

காலாப்பட்டு சிறை

மேலும், பெண் புரோக்கர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை கடத்துவதற்காக கொடுத்த முன்பணம் ரூ.10 ஆயிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர், 3 பேரையும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்துக்குள் குழந்தையை பத்திரமாக மீட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை சீனியர் எஸ்.பி. பாராட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review