சென்னை மாநிலக் கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி சிங் ஆட்சி காலத்தில் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். அத்துடன், சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் அரசு பணி இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார். வி.பி. சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூபாய் 52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி. சிங் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கலந்து கொள்கிறார்.

இது தவிர வி.பி. சிங் மனைவி சீதா குமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய் சிங் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். இது தவிர இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான அழைப்பு முறையாக அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.