கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு வழியாக செல்லும் திருவண்ணாமலை இருவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதற்கான நிலத்தை அளவீடு செய்து அதில் உள்ள கட்டிடங்கள். கடைகள் போன்றவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றுபாலம் அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இங்குள்ள வீடுகளை தாங்களாகவே அகற்றி கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆட்டோவில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை மாற்று வழியாக கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சாலை விரிவாக்க பணியால் வீடுகள் அதிகளவில் சேதம் ஏற்படும்.

இதனால் எங்களின் வாழ்வாதாரம் இழந்து போகக்கூடிய சூழல் நிலவி வருவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்களிடம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகள் பாதிப்படையாத வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் சாலை அமைக்கும் போது சேதம் ஏற்படும். வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வீடுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் போது பாதிக்கப்படக்கூடிய வீடுகள் மற்றும் சாலைகளை இருசக்கர வாகனத்தில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்துக்கு சென்று பாலம் அமைக்கும் பணிகளுக்காக அளவீடு செய்த இடங்களை ஆய்வு செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சங்கராபுரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், ஊராட்சி மன்றதலைவர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் முருகன், மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.