வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே திருச்சி பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சியில் பாஜக டெபாசிட் இழக்கும் என திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் மக்களவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து, இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.

அதேசமயம், அதிமுக, பாஜக கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டன. இன்று மாலை அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைய உள்ளது. இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது அதிமுக.
பாஜகவும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அப்போது சில நாளைக்குள் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. பாஜகவில் சீட் பெற பலரும் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராம சீனிவாசன் திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது.

திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ களமிறங்குகிறார். அவரை எதிர்த்து, ராம சீனிவாசனை களத்தில் இறக்குவது பற்றி பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் பரபரத்தன.
இந்த நிலையில், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாகவே திருச்சி பாஜகவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா சிவா, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

“வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம்” என ராம.சீனிவாசன் திருச்சியில் நிற்பதற்கு எதிராக பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா சிவா. அவர் வெளியிட்டுள்ள பதிவில்;-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இராம சீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும்.

அப்போது வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக, மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்படிக்கு பாஜகவின் உண்மைத் தொண்டன் திருச்சி சூர்யா” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் உரையாடிய போது இழிவான சொற்களால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
அதன்படி, விசாரணை நடத்தப்பட்ட பின்னர் திருச்சி சூர்யா சிவா 6 மாத காலத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

திருச்சி சிவா, சூர்யா சிவா, அவர் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, பாஜகவில் பணியாற்றி வருகிறார் திருச்சி சூர்யா.
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ராம.சீனிவாசனை திருச்சியில் நிறுத்தினால் பாஜக டெபாசிட் இழக்கும் எனக் கூறி அதிர வைத்துள்ளார் திருச்சி சிவா.

திருச்சி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா அல்லது பாஜக போட்டியிடுமா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.