கோவை சிவானந்தா காலனியில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கூறி பா.ஜ.கவினர் வாழைபழத்துடன் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க போலீசார் அனுமதிக்காததால் அந்த வாழைப்பழங்களை பா.ஜ.கவினரே சாப்பிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுகிறார் என கூறி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் உளுந்த வடை வழங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையிலும் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் உளுந்த வடை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார இயக்கம் இன்று கோவையில் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டனர். ஆனால் போலீசார் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். அப்படி வழங்கினால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.
இதனை அடுத்து பா.ஜ.கவினர் முதல்வர் ஸ்டாலின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும், பொதுமக்களுக்கு வாழைபழத்தை கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின் முடிவில் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு கொடுக்க முடியாமல் போனதால் , கொண்டு வந்திருந்த பழங்களை மக்கள் சார்பில் தாங்களே சாப்பிடுவதாக கூறி வாழைப்பழங்களை பா.ஜ்கவினர் சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.