நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வருகிற 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அப்போது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘39 தொகுதிகளிலும் ஓட்டு என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அப்போது ஓட்டு என்ற ஆயுதத்தை அதிமுகவுக்கு கொடுத்துப் பாருங்கள், அது மக்களை காப்பாற்றும்.
அந்த ஆயுதத்தை பாஜகவுக்கு கொடுத்தால் அது உங்களையே அடிக்க பயன்படும். இந்த தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்தால் இப்போ 4 முறை இங்கே வரும் பிரதமரை தமிழ்நாட்டிலேயே தவமிருக்க வைப்போம்.

அப்போது ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்க வைப்போம். இந்த தேர்தல்ல பாஜக சாமியையும், மதத்தையும் சொல்லி அரசியல் செய்து சாமியையே பயப்பட வைப்பார்கள் என்றார்.