தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்கள் அனைத்திலும், வருகிற லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் போட்டியிடும் என, அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். டில்லியில், நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது, பிற தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகியவற்றிலும், எங்கள் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர். அதற்கு வசதியாக பொது சின்னம் தேவைப்படுகிறது.

எங்களது பானை சின்னத்தையே பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து உள்ளோம். இதனால் பொது சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே சமயம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக செயல்படுவதாக தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் சரத்பவார் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
அப்போது தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்று ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்க்கின்றனர். இதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றும் என்றும் நம்புகிறோம். கடந்த சட்டசபை தேர்தலின் போது 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் தான் நின்றோம்.

அப்போது யாரிடம் இருந்தும் நெருக்கடி இல்லை. அதேசமயம், கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து, அவர்களது சின்னத்தில் போட்டியிடும் படி, திமுக ஆலோசனையை வழங்கியது. வருகிற லோக்சபா தேர்தலில் பானை சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும்.
அதற்கு எந்த சிக்கலும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு, திமுக கூட்டணியில் பொது தொகுதி கேட்பது குறித்து பலரும் ஆச்சரியமாகக் கேட்கின்றனர். ஏன், நாங்கள் பொது தொகுதியில் போட்டியிடக் கூடாதா? இவ்வாறு கூறினார்.

அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான உயர் நிலைக் குழு தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்தையும், நேரில் சந்தித்த திருமாவளவன், கட்சி சார்பில் மனு அளித்தார். பின்னர், அவர் கூறியதாவது;- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை ஏற்புடையதல்ல.
அமெரிக்காவில் இருப்பது போல, அதிபர் ஆட்சி முறைக்கே வழிவகுக்கும். பார்லிமென்ட் ஜனநாயகத்தை சிதைக்கும். அரசியல் நிர்ணய சபையில் முக்கிய தலைவர்கள் பலரும் விவாதித்த பின்னரே, இந்தியாவுக்கு அதிபர் முறை தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

பார்லிமென்ட் ஜனநாயகத்தில் மட்டுமே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கூட கேள்வி கேட்க முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும். அந்த முயற்சியை கைவிட வேண்டும்.
இதை,ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.