விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு அதிவேக இணையதள இணைப்பு பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கு இணையாக குறைந்த கட்டணத்தில் விரிவான இணைய சேவையை வழங்குவதற்காக ஒன்றிய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பாரத் நெட் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதை தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு கம்பி இழை வளைய அமைப்பு நிறுவனம் (டேன்பி நெட்) மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக தமிழ்நாடு கண்ணாடி இழை வளைய அமைப்பு நிறுவனம் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது; தற்போது மழை காலம் என்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக பயணிக்க தக்கவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிகளை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்ளும் பேஸ் டிஜிடக் இன்பரா லிமிடெட் நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நிறுவனத்தால் உறுதியளித்தவாறு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையதள இணைப்பு வழங்கப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்களில் மின் இணைப்பு முறையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.

ஏதேனும் மின்சாரம் தடைபட்டால் இரண்டு நாட்களுக்குள் மின்விநியோகத்தை சரி செய்ய தொடர்புடைய ஊராட்சி செயலாளர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பாக்கப்படுகிறார்கள். மேலும் இணையதள இணைப்பு வேண்டி ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களை கணக்கெடுப்பு செய்து, உரிய இணைதளத்தில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்ட பணியில் சுமார் 200 கிராம ஊராட்சிகள் தங்கள் அரசு கட்டிடங்களில் உள்ளீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது இவற்றை ஒரு வார காலத்திற்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.