இந்திய மற்றும் மலேசிய ராணுவத்திற்கு இடையிலான கூட்டு இருதரப்பு பயிற்சி “ஹரிமாவ் சக்தி 2023” இந்தியாவின் உம்ராய் கன்டோன்மென்டில் இன்று தொடங்கியது. மலேசிய ராணுவப் பிரிவில் மலேசிய ராணுவத்தின் 5 வது ராயல் பட்டாலியனைச் சேர்ந்த துருப்புக்கள் உள்ளனர். இந்திய அணியை ராஜ்புத் ரெஜிமெண்ட் பட்டாலியன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவின் க்ளூவாங்கில் உள்ள புலாய் நகரில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
2023 நவம்பர் 5 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள ஹரிமாவ் சக்தி, இரு தரப்பிலிருந்தும் சுமார் 120 பணியாளர்களை ஈடுபடுத்தும். இது ராணுவ திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சியின் போது, இரு படைப்பிரிவுகளும் ஒரு கூட்டு கண்காணிப்பு மையத்துடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டமைப்பை நிறுவும்.

இரு தரப்பினரும் காடு / அரை நகர்ப்புற / நகர்ப்புற சூழலில் கூட்டுப் படைகளை பணியமர்த்துவதற்கான ஒத்திகையை மேற்கொள்வார்கள். மேலும், உளவுத்துறை சேகரிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பரவல் பயிற்சிகளும் ஒத்திகை செய்யப்படும். இந்த பயிற்சியில் ட்ரோன்கள் / யுஏவிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். இரு தரப்பினரும் விபத்து மேலாண்மை மற்றும் வெளியேற்றும் பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
இந்தப் பயிற்சி முதன்மையாக அதிக அளவிலான உடல் தகுதி, தந்திரோபாய மட்டத்தில் பயிற்சிகளை நடத்துதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தும். அரை நகர்ப்புற பகுதியில் 48 மணி நேர சரிபார்ப்பு பயிற்சியுடன் இந்த பயிற்சி நிறைவடையும்.

“ஹரிமாவ் சக்தி பயிற்சி” இந்திய- மலேசிய இராணுவங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்.