சென்னை விமான நிலையத்தில் ₹8.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் – விமான நிறுவன ஊழியர் உட்பட 2 பேர் கைது..!

2 Min Read
சென்னை விமான நிலையத்தில் ₹8.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவில் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான பயணிகளையும் கண்காணித்து வந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையம்

அவர், சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து விட்டு, டிரான்சிட் பயணியாக, சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இருந்தார்.

அந்த இலங்கை பயணி, விமான நிலையத்திற்குள், டிரான்சிட் பயணிகள் தங்கி இருக்கும் அறையில் தங்கி இருந்தார். ஆனாலும் சுங்க அதிகாரிகள் அவரை ரகசியமாக கண்காணித்து கொண்டே இருந்தனர்.

அதை தொடர்ந்து, இலங்கை பயணி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்வதற்காக, பாதுகாப்பு சோதனை பகுதிக்கு வந்தார். அப்போது இலங்கை பயணி, தான் வைத்திருந்த ஒரு பார்சலை எடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரிடம் ரகசியமாக கொடுத்து, அவரிடம் ஏதோ கூறிக்கொண்டு இருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ₹8.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இதை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்க அதிகாரிகள், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் வைத்திருந்த பார்சலை வாங்கி, பிரித்துப் பார்த்தனர். பார்சலுக்குள் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சுங்க அதிகாரிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியரையும், இலங்கை பயணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் இலங்கை பயணியின் துபாய் பயணத்தையும் ரத்து செய்தனர். அதோடு பார்சலில் இருந்த தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்து, சுங்க அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பார்சலில் மொத்தம் 13.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹8.5 கோடி ஆகும்.

சுங்கத்துறை அதிகாரிகள்

மேலும் இலங்கை பயணி, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் இருந்து தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு வருவார். பின்னர், சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியரிடம் இந்த தங்க கட்டிகளை கொடுத்து,

சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் சென்று, தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆசாமியிடம் ஒப்படைத்து விட்டு, இலங்கை பயணி, விமானத்தில் துபாய் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.

விமான நிறுவன ஊழியர் உட்பட 2 பேர் கைது

பொதுவாக விமான நிலையங்களில் டிரான்சிட் பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தமாட்டார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு, இந்த இலங்கை பயணி, இதைப்போல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இந்த கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் வெளிப்பகுதியில், இண்டிகோ ஊழியரிடம் இருந்து வாங்கி செல்வதற்காக வந்திருந்த கடத்தல் ஆசாமி யார், என்றும் சுங்கத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Share This Article
Leave a review