திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாண்டார் கோயில் ஏரிக்கரை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மேற்கு எஸ்.பி வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். இதில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பள்ளித்தென்னல் ஆனந்தன் வயது 25, அருள் வயது 24, திண்டிவனம் வெள்ளிமேடு பேட்டை முகமது அர்ஷத் வயது 34 என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்கள் லாரி ஓட்டுனர்களிடம் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கல், 3 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் போலீசார் தீவிர விசாரணையில் கஞ்சா சப்ளை செய்த ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த நவீன் குமார் வயது 28, சதீஷ் வயது 31, ஷேக் பாபு வயது 22, அரவா ஜேம்ஸ் 21 ஆகிய 4 லாரி டிரைவர்களை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா கூறுகையில்;- தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 லாரி டிரைவர்களும் ஆந்திரா பீகார் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு லாரி டிரான்ஸ்போர்ட் மூலமாக கஞ்சாவை எடுத்து வந்து இளைஞர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆந்திராவில் உள்ள மருந்து மாத்திரை தயாரிக்கும் கம்பெனியில் கஞ்சாவை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றனர். அங்கிருந்து கஞ்சாவை மட்டும் வாங்கி வருகின்றனர். மேலும் பீகார், ஆந்திரா மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் கஞ்சாவை அதிக அளவில் பயிரிட்டு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

கஞ்சா விற்கும் பணம் முழுவதும் தீவிரவாதிகளை சென்றடைகிறது. எனவே ரயில் மூலமாக கஞ்சாவை புதுவை மற்றும் தமிழகத்துக்கு கடத்தி வந்தனர். தற்போது அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளதால் டிரான்ஸ்போர்ட் லாரிகள் மூலமாக கொண்டு வரும் புதிய யுக்தியை கடைபிடித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு 87.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்காக 137 வழக்குகள் பதியப்பட்டு, 311 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு கஞ்சா புழுக்கம் அதிகரித்து 128.2 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது 148 வழக்குகள் பதியப்பட்டு 361 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.