புதுக்கோட்டை மாவட்டம், அடுத்த இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கரின் வீட்டில் காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 3 கார்களில் வந்த 12 அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், இலுப்பூர் வீட்டில் உள்ள அவரது பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா, குட்கா முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து அதிமுகவினர் மற்றும் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.

இதனால் பாதுகாப்புப் பணியில் இலுப்பூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

சென்னை, மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது குவாரியிலும் ஏற்கனவே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

எனவே, அந்த சோதனையின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் தற்போது கல்குவாரியிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அமலாகக்த்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பிறகே சோதனைக்கான முழு விவரம் தெரியவரும்