திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட முற்ப்பட்டதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் : திருப்பத்தூர் அடுத்த அனுமந்த உபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த (16) சிறுமி மற்றும் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சுகேஷ் என்ற (19) வாலிபர் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அனுமந்த உபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த செல்வம் (38) மகன் கார்த்திக் (18) ஒரு தலைப்பட்சமாக (16) சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக கடந்த எட்டாம் தேதி சுகேஷ் கார்த்தியின் வீட்டிற்குச் சென்று நான் அந்த (16) சிறுமியை காதலித்து வருகிறேன் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் (18) மற்றும் அவருடைய தந்தை செல்வம் (38) மற்றும் அவருடைய கூட்டாளிகள் பாலாஜி (20), தருமன் (25), முத்து (26), ஆகிய ஐந்து பேர் சேர்ந்து கட்டையால் சுகேஷை சரமாரியாக தலையில் தாக்கியுள்ளனர். சுகேஷ் பலத்த காயங்களுடன் கீழே சரிந்தார். உடனே அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவ அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவ அவசர ஊர்தி வாகனத்தில், ரத்த வெள்ளத்தில் துடிதெடுத்து கீழே விழுந்த சுகேஷை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலிசார் விசாரனையை மேற்க்கொண்டனர். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த நிலையில், சுகேஷ் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் மற்றும் சுகேஷின் நண்பர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர்.

அதற்கு முன்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சாலை மறியலை தடுத்து நிறுத்தினர். மேலும் கார்த்திக்கின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சுகேஷியின் உடலை அடக்கம் செய்யும் வரை எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.