சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
சூடானில் உள்நாட்டு போர் நடைபெறும் இடத்தில் 200 தமிழர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின . அதுமட்டுமில்லாமல் சாலைகளில் செல்லும் மக்கள் மீது துப்பாக்கிசூடும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார் அதில் “சூடான் போரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஒன்றிய அரசு எடுக்கும் அணைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழர்களை மீட்பதற்காக பிரத்தியோகமாக கட்டுப்பாட்டு அறையும் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார் .
மத்திய அரசு , சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டத்திற்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிட்டது . சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் இதுவரை 4 விமானங்களில் இந்தியர்கள் போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 360 பேர் கொண்ட முதல் இந்திய குழு சவூதி அரேபிய விமானம் மூலம் நேற்று இரவு புதுடெல்லி வந்தடைந்தனர். இந்த தகவலினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் டெல்லி வந்தடைந்தது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மீட்கப்பட்டவர்களில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைமற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
உணவு, உடையின்றி பாதுகாப்பான இடம் தேடி நாடோடிகளாக திரிந்தோம் :
சூடானிலிருந்து மீட்டு தமிழகம் வந்து 14 வயது மாணவி தனது அனுபவத்தை தெரிவிக்கும்போது , போர் ஆரம்பித்த நாளிலிருந்து , மின்சாரம் , தண்ணீர் , உணவு என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் , கிடைக்கும் உணவு பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தி இத்தனை நாள் உயிர் பிழைத்தோம்.
எனது பள்ளி சான்றிதழ்கள் , உற்பட அனைத்தையும் விட்டுவிட்டு அணிந்திருந்த ஆடையோடு இந்திய வந்துளோம் .இந்த போரினால் எனது 14 வருட பள்ளி படிப்பு முற்றிலும் வீணாகிவிட்டது . இப்பொழுது எனது படிப்பை நான் முதலிலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் . தமிழக அரசு எங்களுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .
மேலும் க்ரித்திகா என்ற பெண்மணி கூறுகையில் கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் சூடானில் வசிக்குறோம் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் போரினால் அங்குள்ள சூழல் எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. கடந்த 8 நாட்களாக நாங்கள் வசித்த பகுதிகளில் போர் உச்சகட்டத்தை எட்டியது இதனால் வீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடி நாடோடிகளாக வாழ்ந்தோம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஒரு துணியை மட்டும் கையில் கொண்டுவந்துள்ளோம். எங்களை பத்திரமாக அழைத்துவந்த இந்திய அரசுக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி என்று க்ரித்திகா தெரிவித்தார்.