தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை 4.83 சதவீதம் வரை உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை வாரியம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு என்பது ஜுலை 1 ஆம் தேதி முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த முறை நாம் மின்கட்டணம் செலுத்தும் போது இந்த உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை பின்பற்ற வேண்டியிருக்கும். இன்று வெளியான அறிவிப்பில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
அதன்படி பார்த்தால் 400 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் போது யூனிட் ஒன்றுக்கு செலுத்திய ரூ.4.60க்கு 20 காசுகள் கூடுதலாக சேர்த்து ரூ.4.80 வசூலிக்கப்பட உள்ளது.

அதேபோல் 401 – 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15 ஆக இருந்தது. இது தற்போது ரூ.6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.18 இருந்தது. இது தற்போது ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 601 -800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ9.20 இருந்தது. இது தற்போது ரூ.9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 – 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 இருந்தது. இது தற்போது ரூ.10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1,000 யூனிட்டுக்கு மேலாக பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ.11.80 வசூல் செய்யப்பட உள்ளது. அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 வசூலிக்கப்படும்.
112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் எந்தெந்த நுகர்வோர் கூடுதலாக எவ்வளவு தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்பது பற்றி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) விளக்கங்கள் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1. இந்த மின்கட்டண உயர்வின் முக்கிய அம்சம் என்னவென்று பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.
2. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
3. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண் 222-ன் படி, நிலைக்கட்டணம் (Fixed Charge) இருமாதங்களுக்கு ரூ20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவர்.

4. தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படம்.
5. இருமாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5 வரை மட்டுமே உயரும்.
6. இருமாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15 வரை மட்டுமே உயரும்.

7. இருமாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டகள் வரை மின்நுகர்வு செய்யும் 25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே உயரும்.
8. இருமாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 12 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40 வரை மட்டுமே உயரும்.
9. 2.10 லட்சம் சிறு மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.
10. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1,500 யூனிட் ஒன்றிற்கு 20 பைசா, 1,501 யூனிட்களுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 25 காசுகள் மட்டுமே உயரும்.

11. தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட் ஒன்றிற்கு 35 பைசா மட்டுமே உயரும்.
12. 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15 மட்டுமே உயரும்.
13. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளகு்கு ஒரு யூனிட்டிற்கு பைசா 35 மட்டுமே உயரும்.

14. உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.
15. நிலையான கட்டணங்கள் கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.