கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையில் 5 கிலோ தங்க நகைகளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நாடாளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் வாகன சோதனை மேற்கொள்ளும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் தனியார் பள்ளி அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி சத்தியபிரகாஷ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, காவலர்கள் இளையராஜா, ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது, சென்னை பெரம்பூர் பகுதியில் இருந்து கேரளா பாலகாட்டிற்கு 5 கிலோ தங்க நகைகளை எடுத்து செல்வது தெரியவந்தது.

அப்போது காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. ஆனாலும் அதிகப்படியான தங்க நகைகள் காரில் இருந்ததால் அவற்றை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து அவற்றை கள்ளக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருமான வரித்துறையினர் ஆகியோர் நகை எடுத்து செல்வதற்கான ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது வாகன சோதனையில் காரில் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.