கோவை மாவட்டம் கரடிமடை பகுதியில் வீட்டில் இருந்த வயதான மூதாட்டியை காட்டு யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது தற்போது அடிக்கடி நடக்க கூடிய ஒரு விஷயமாக மாறி விட்டது.

வன விலங்குகளை பொறுத்தவரையில், யானைகளால் தான் மனிதர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. யானைகள் பயிர்களை நாசம் செய்வதுடன், வாகனங்களையும் சேதப்படுத்துகின்றன. கூடவே மனித உயிர்களை எடுக்கும் எமனாகவும் யானைகள் உருவெடுத்துள்ளன.
கோவை மாவட்டம், வனப்பகுதி ஒட்டி உள்ளதால், வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வழக்கம். அவை வனபகுதியில் தண்ணீர், உணவு இல்லாத காரணத்தால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.

கோவை மாவட்டம், அடுத்த மதுக்கரை வனசரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே விஷ்ணு என்பவரின் தோட்டத்திற்க்கு நேற்று அதிகாலை காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
அப்போது தோட்டத்து வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த பணியாளர் நாகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி சத்தம் கேட்டு எழுத்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் வந்த ஒற்றை ஆண் காட்டு யானை மூதாட்டியை கீழே தள்ளியது.

அதில் தலை மற்றும் உடல் பகுதியில் மூதாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கிருந்து நகர்ந்த யானை அருகில் இருந்த மற்றொரு தோட்ட வீட்டில் வைத்திருந்த அரிசியை யானை எடுக்க முயன்றது.
அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த வேலையாட்களை சத்தம் போட்ட போது எதிர்பாராத விதமாக தள்ளியதில் தனலெட்சுமி வயது 40 என்பவரும் காயம் அடைந்தார்.

அப்போது ஒற்றை காட்டு யானை வீடுகளில் வைக்கப்பட்டுள்ள அரிசியை எடுக்க வந்த பொழுது அடுத்தடுத்து இந்த இரண்டு சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. மேலும் காயமடைந்த இரு பெண்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதனிடையே 70 வயதான மூதாட்டி நாகம்மாள் என்பவரை காட்டு யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.