வெள்ள பாதிப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார். அவருக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.
விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 50 பேர் விழுப்புரத்தில் இருந்து சீனிவாசன் தலைமையில் கடந்த 27 ஆம் தேதி ஆன்மீகப் பயணமாக ஸ்ரீ வாசவாம்பாள் யாத்திரை குழு மூலமாக காசிக்கு பயணம் செய்தனர். அங்கு ஆன்மீகப் பயணத்தை முடித்து கொண்டு கயாவிலிருந்து 3-ம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறப்படுவதாக இருந்தனர். ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையினால் சென்னைக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்கள் புறப்பட இருந்த கயா எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் விழுப்புரம் வர முடியாமல் அவர்கள் தவித்தனர். உடனே இது பற்றி அவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தொடர்பு கொண்டு விழுப்புரம் திரும்ப தங்களுக்கு உதவி செய்யுமாறு கூறினார். அதன் பெயரில் அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தொடர்பு கொண்டு தெரிவித்ததை எடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் தலைமை செயலக அதிகாரிகள் வாரணாசி கலெக்டரை தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவித்தனர். இதைஎடுத்து விழுப்புரம் மக்கள் உடனடியாக ஒரு ஆசிரமத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பின்னர் அவர்கள் 5-ம் தேதி காலை கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் வந்தடைந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் நேற்று விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் காசியில் தவித்த தங்களுக்கு உதவி செய்து தமிழக அரசுக்கும் அவர்கள் நன்றியை தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; மழைநீர் வெள்ள பாதிப்புகளை அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

47 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிக அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், பாஜகவினரும் மற்றும் தினகரனும் வெளிப்படையான மனது இருந்ததால் பாராட்டி உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டுமென நினைப்பதால் அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்பதாலே ஏதேதோ பேசுகிறார். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடையாது என்றார். அப்போது மாவட்ட செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.