இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது .
இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை, சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வேளாண் துறை மந்திரி மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .
சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மகிந்தா தெரிவித்துள்ளார் .
டோக் மக்காக் என்ற குரங்கு வகை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டது. அரிய வகையைச் சேர்ந்த டோக் மக்காக் குரங்குகளை, சீனாவின் வேண்டுகோளின் பெயரில், அந்நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்ப உள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டுள்ள நிலையில், உணவு தேடி கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதாலும், சில சமயங்களில் மக்களைத் தாக்குவதாலும் குரங்குகளை இலங்கை மக்கள் தொல்லையாகத் தான் கருதுகின்றனர்.
இலங்கை இந்த ஆண்டு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலிலிருந்து பலவற்றை நீக்கியது. அந்நாட்டிலுள்ள 3 குரங்கினங்கள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உட்படப் பலவற்றைக் கொல்ல விவசாயிகளுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவிலிருந்து இதுபோன்ற ஒரு கோரிக்கை வந்துள்ளதால், இலங்கையும் மனமுவந்து குரங்குகளைத் தர ஒப்புக் கொண்டுள்ளது.