கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழையானது, தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இன்று திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது. திடீர் மழையால் கோடை, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் குறிப்பாக புறநகர் பகுதிகளில் வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம், மாநகர் பகுதியில் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும், லங்கா கார்னர் ரயில் பாலத்திற்கு அடியிலும், அதிக அளவிலான கனமழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி, மழைநீர் வடிகால் அனைத்தும் நிரம்பின. இதனால் சாக்கடை நிரம்பி மழைநீருடன் சாக்கடை கலந்து சாலை மற்றும் தெருக்களில் நீராக ஓடியது. இதனிடையே கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ள மூங்கில் மரம் ஒன்று சாய்ந்தது. இதே போல் சாலையோரம் உள்ள மரக் கிளைகள் உடைந்து விழுந்தன. அவினாசி சாலையில் தேங்கிய மழை நீரால் அப்பகுதி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.

கோவை மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையால் உருவான வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து சென்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை மற்றும் கழிவுநீர் மழைநீருடன் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கோவையில் உக்கடம் ஆத்துப்பாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதிகளில் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் தேங்கியுள்ள மழை தண்ணீர் நெடுஞ்சாலை துறை மூலமாக மழை நீரை வெளியில் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுமுறை அறிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழை காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஆகிய உள்ளிட்ட மாவட்டங்களில், ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.