திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து நாசம் ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசு தகுந்த நிவாரணம் அளிக்க உதவி கேட்டு விவசாயி கோரிக்கை.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு விவசாயிகள் கரும்பு பயிரிட்டு அறுவடை செய்யும் தருவாயில் உள்ளனர். அதன் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பை சேர்ந்த கணேசன் தனது நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். தற்போது கரும்பு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனத்த மழை பெய்ய தொடங்கியது.

திண்டுகல்லில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை நீடித்தது. இந்த கனமழையால் விவசாயி பயிரிடப்பட்ட கரும்புகள் வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகின. இது குறித்து கரும்பு விவசாயி திரு கணேசன் கூறுகையில்;-
கரும்பு விவசாயம் செய்ய தேவையான உரம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் விவசாய கூலியும் உயர்ந்து உள்ளது. ஆனால் கரும்பின் விலை மட்டும் 15 ஆண்டுகளாக ஒரே விலையில் தான் உள்ளது. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது. மேலும் எறும்பு, அணில், மயில் உள்ளிட்ட பிராணிகளில் இருந்து கரும்பு கட்டையை காப்பாற்றி கொண்டு வருவதற்கு போதும் போதும் என ஆகிவிடுகிறது. இவ்வளவு சிரமங்களையும் தாண்டி பயிரிட்டு அறுவடை செய்து விலை மட்டும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.

கடந்த ஆண்டு வரை 70 சென்ட் நிலத்தில் கரும்பு பயிரிட்டோம். ஆனால் இந்த ஆண்டு 30 சென்ட் மட்டுமே பயிரிட்டுள்ளோம். தமிழகத்தில் பொங்கல் பரிசுக்காக தமிழ்நாடு கூட்டுறவு துறை மூலம் கரும்பு கொள்முதல் செய்கிறது. ஆனால் அந்த கரும்பின் விலை குறைவாகவே உள்ளது.
விவசாயிகள் கரும்பின் விலை குறைவாக இருந்தாலும் சரி, லாபம் இல்லாட்டினாலும் நஷ்டம் இல்லாமல் இந்த அறுவடையை சிறப்பாக நடத்தி விடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், எனவே தமிழக அரசு தங்களுக்கு தகுந்த நிவாரணம் தொகை அளிக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.