சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், “முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்”உரை நிகழ்த்தினார்.அப்போது பேசிய அவர்.
அதிமுக ஆட்சியின் அவலங்களை இரண்டே ஆண்டுகளில் சீர் செய்துள்ளதாக கூறினார். திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல என்றும், சனாதனத்தை காலாவதியாக்கிய மாடல்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் என கேட்ட மு.க.ஸ்டாலின், அதற்காகத் தான் அவர் ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்படாரா என கேள்வி எழுப்பினார். சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளித்த பிறகும் பேசி வரும் ஆளுநர், குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறாரா? எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும், தன்னை சர்வ அதிகாரம் படைத்தவர் என்று நினைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கும் ஒரு சட்டத்திற்கு, நியமன ஆளுநரிடம் கையெழுத்திற்காக காத்திருப்பதை விட மக்களாட்சிக்கு அவமானம் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
“மாண்புமிகு ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம். அதனால்தான் திராவிடத்தைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.