”மோடி சுட்ட வடை” என தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுக நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அப்போது பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக எல்லோருக்கும் எல்லாம் என்கிற பெயரில் பொதுக்கூட்டத்தை 3 நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் பல பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவார் என புதுவிதமான நூதன பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர். அப்போது மோடி சுட்ட வடை எனக்கூறி, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்ட மேடை அருகே கிரைண்டர் மூலம் மாவாட்டி மோடியின் முகமூடி அணிந்தவாறு அங்கேயே சுட சுட வடை சுட்டு கூட்டத்திற்கு வந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் என அனைவருக்கும் இது மோடி சுட்ட வடை என்று பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் கூட்டம் ஆரம்பித்து முடியும் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடைகள் வழங்கப்பட்டது. சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு பிரதமர் மோடியின் உருவப்படம் மற்றும் மோடி சுட்ட வடை என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களில் வைத்து உளுந்த வடைகளை விநியோகம் செய்தனர். திருச்சியிலும் இந்த நூதன பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு, மோடி சுட்ட வடை, மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்களுக்கு வடை கொடுத்தனர். மேலும் கோவை, பொள்ளாட்சியில் காவி நிற துண்டுகளுடனும், மோடியின் முகமூடி அணிந்தும் பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில், வடை வழங்கினர்.

பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர்.
வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.