பெண் கிராம நிர்வாக அலுவலரை காலால் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் : வானதி கண்டனம்

0
31
எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

பெண் கிராம நிர்வாக அலுவலரை காலால் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது. சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஆயந்தூர் கிராம வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை, திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி காலால் எட்டி உதைத்துள்ளார். தகாத வார்த்தைகளைக் கூறி அவமதித்துள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியரை, அதுவும் பெண் அரசு ஊழியரை தாக்கி, அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்த பிறகு, அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த காவல்துறை, வேறு வழியின்றி திமுக கவுன்சிலர் ராஜீவ் காந்தியை கைது செய்துள்ளது.

அரசு ஊழியரையே காலால் எட்டி உதைக்கும் அளவுக்கு அதிகார போதையில் இருக்கும் திமுகவினர், சாதாரண பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைக்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, கைது செய்ததோடு கடமை முடிந்து விட்டதாக கருதாமல், அவருக்கு சட்டப்படி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

வானதி சீனிவாசன்

திமுக ஆட்சிக்கு வந்தாலே அக்கட்சியினர், அரசு ஊழியர்களை தங்களது அடிமை என்று கருதுகின்றனர். மீறி நியாயமாக செயல்படும் அரசு ஊழியர்களை தாக்குவது, ஆபாசமாக திட்டுவது என்று அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இது திமுகவினரின் வழக்கமாக மாறிவிட்டது. திமுகவினரின் இந்த அத்துமீறல்களுக்கு, அராஜகங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி மீது எடுக்கப்படும் நடவடிக்கை, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here