காவிரி பிரச்சினையில் பாராமுகம் காட்டும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ அறிவிப்பு

4 Min Read

காவிரி பிரச்சினையில் பாராமுகம் காட்டும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் செப்டம்பர் 29 ஆம் தேதி ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில், டெல்லியில் நடந்தது. இதில், தமிழக அரசின் சார்பில் ,“கர்நாடக அணைகளில், 50 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. எனவே, அம்மாநில அரசு நினைத்தால், 5,000 கன அடி வரை திறந்துவிட முடியும். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி தந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவும் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற அனைத்து பாதிப்புகளையும் தமிழகம் தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா செயல்படுகிறது. எனவே, வினாடிக்கு 12,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும்” என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஒழுங்காற்றுக் குழு அளித்த புள்ளி விபரங்களை பரிசீலனை செய்த காவேரி மேலாண்மை ஆணையம், அடுத்த 15 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும்“ என உத்தரவிட்டது.

காவிரி பிரச்சினை

ஆனால் கர்நாடக அரசு.உச்ச நீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் பிறப்பித்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.மேலும் கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் அங்கு தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது.இதனால் காவேரி படுகை பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகி நாசமாகிக் கொண்டிருக்கின்றன.2023-2024 நிதியாண்டின் ஒன்றிய அரசால், மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 21.6 விழுக்காடு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 2022-2023 நிதியாண்டில் வேலை கேட்போரின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லத் தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், சுமார் 85-90 விழுக்காடு பேர் பெண்களாக உள்ளனர். அதே போன்று, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாள்களில், சுமார் 57.19 விழுக்காடு வேலைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. எனவே, இந்த நிதியாண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு 21.6 விழுக்காடு நிதியை குறைத்துவிட்டது.மேலும் இத்திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு அலட்சியப் போக்கோடு செயல்படுகிறது.இதனால் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், முறையாக வேலை வழங்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.இதனால் சாதாரண கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.எனவே ,உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும்,தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும்,எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியைத் தொடங்கிட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும்,தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும்,மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்டோபர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வைகோ

கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன், டாக்டர் ரொகையா, மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் கு.சின்னப்பா, புதூர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்ல மண்டி சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி. சேரன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், தஞ்சை தெற்கு மாட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் இராமஞ்சேரி ஸ்ரீதரன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் செல்வராகவன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, கரூர் மாவட்டச் செயலாளர் ஆசை சிவா, அரியலூர் மாவட்டச் செயலாளர் இராமநாதன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் கழக அணிகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

காவிரியில் நமது மரபு உரிமையை நிலைநாட்டவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கவும் மறுமலர்ச்சி திமுக நடத்த இருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review