விழுப்புரத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வடிவேல் திரைப்பட நகைச்சுவைப் பணியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் கூட்டணிக்கு இலவு காத்த கிளியாக அதிமுக இருப்பதாகவும், கட்சி, சின்னம் தகுதியானவரிடம் இருந்தால் தான் மதிப்பு என்று அமமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மாநில கட்சிகளை இழுக்க ரகசிய பேச்சு நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாமகவை தன்வசம் இழுப்பதற்கு எடப்பாடி அனுப்பிய தூதில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும், 10 மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா ஒன்று என தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்றைய தினம் அன்புமணி ராமதாஸ் எம்.பி, அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்தி பரவி வருவதாக கூறியுள்ளார். இதனால் அதிமுக கூட்டணிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். இதனால் அதிமுக தலைமை அப்செட்டில் இருக்கிறதாம். இந்த நிலையில் விழுப்புரத்தில் அமமுக விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் சுகர்ணா என்பவர் சார்பில், அதிமுகவை விமர்சித்து பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் இலவு காக்கும் கிளி என்ற தலைப்பில், மெகா கூட்டணி பாமக, தேமுதிக, தமாக, இஜக, புதக, புநீக என்று அதன் அருகில் இலவங்காய் படத்தை வைத்தும், மற்றொரு கிளையில் இரட்டை இலையின் மீது கிளி அமர்ந்து காத்திருப்பதை போன்று படங்களை வைத்துள்ளனர். அதன் கீழ் தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவரிடம் இருந்தால் தான் மதிப்பு என்று எழுதப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அதிமுகவில் கூட்டணி பேச்சுக்கு யாரும் வராத நிலையில், இலவு காக்கும் கிளியாக அதிமுகவின் நிலை இருப்பதாக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.
இந்த போஸ்டரால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், அ.தி.மு.க., அ.ம.மு.க. இடையே கருத்து மோதலும் அதிகரித்து உள்ளது.