13 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் இலை சுற்றும் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தன்சித் 51 ரன்னும், தாஸ் 66 ரன்னும் எடுத்து வெளியேற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரகிம் 38 ரன்களும், மஹ்முதுல்லா 3 சிக்சர் 3 பவுண்டரியுடன் 46 ரன்கள் அதிரடியாக சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 256 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 48 ரன்களும், சுப்மன் கில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 53 ரன்களும் எடுத்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 97 பந்துகளில் 4 சிக்சர் 6 பவுண்டரியுடன் 103 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 34 ரன்கள் சேர்க்க 41.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.