டிடிஎஃப் வாசன்
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்தார். இவருக்கு மாநிலம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் அடிக்கடி டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதாவது போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் அதிவேகமாக செல்வது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவாகின. அவருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மராட்டியத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார்.
எலும்பு முறிவு ஏற்பட்டது
இதில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 45 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே தான் அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறிய புகாரில் அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பைக் ஓட்டுவதை நிறுத்தினார். இந்நிலையில் தான் தற்போது டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்றுள்ளார். இந்த வேளையில் அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் உள்பட 6 பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் இன்று இரவு அண்ணாநகர் போலீசார் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து இப்படி சிக்கலில் சிக்குவது அவருக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது.இளைஞர்கள் இது போல சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்பது அரசின் அறிவுருத்தலாக இருந்து வருகிறது.