தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் தினந்தோறும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தொடர் கனமழை பெய்கிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனால் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெயில் குறைவாகவும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.
பிற்பகல் முதல் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ய துவங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கனமழையும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

குறிப்பாக, கவுண்டம்பாளையம், பீளமேடு, அவினாசி சாலை, நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், பட்டணம், விளாங்குறிச்சி, சேரன்மாநகர், சிட்ரா, சிங்காநல்லூர், வெள்ளலூர், ராம்நகர், போத்தனூர் ஆகிய பகுதிகளிலும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம்,
தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, சூலூர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம் ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டர் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், டாக்டர் பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு தொடர் மழைபொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக திடீர் வெள்ள அபாயம் உள்ளது எனவும்,
எனவே பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வேண்டாம் என பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குரங்கு அருவி எனப்படும் கவியருவி உள்ளது.

கோவையில் தொடர் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இங்கு குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் வந்து குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மலைப்பொழிவு அதிக அளவில் பொழிந்ததால் அருவியில் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததும் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை என தெரிவித்தனர்.