சமீபத்தில் தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசியிருந்தார். இது சீனாவை கடும் எரிச்சலடைய வைத்திருக்கிறது. இதனையடுத்து தைவான் கடற்பகுதியில் சீன ராணுவம் தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
ஏற்கனவே நேட்டோ விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, உக்ரைன்-ரஷ்யா போரை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தது தற்போது சீனாவுக்கும்-தைவானுக்கும் இடையேயான சர்ச்சையை உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோச்சி தைவானுக்கு வருகை தந்திருந்தார்.

தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு உரிமை கொண்டாடி வரும் நிலையில் தங்களிடம் அனுமதி பெறாமல் தைவானில் நான்சி நுழைந்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. அதுபோல நான்சி வந்திருந்த நாளில் தைவான் கடற்பகுதியில் ஆயுதங்களை வீசி சீன ராணுவம் பயிற்சியை மேற்கொண்டது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது முதல் அமெரிக்கா தனது நிலைப்பாட்டிலிருந்த பின்வாங்கவே இல்லை. தைவானை தனி நாடாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சிதான் நேற்று நடந்த தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திப்பாகும். இந்த விவகாரத்தில் சீனாவின் கோபத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் தூண்டி வருகிறது. எனவே இந்த சந்திப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் தைவான் நோக்கி திருப்பிவிட்டிருக்கிறது. இவை தைவான் ஜலசந்தியிலும், கிழக்கு பகுதியிலும் தீவிர போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ‘United Sharp Sword’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியானது வரும் 10ம் தேதி வரை நடைபெறும் என்று சீன ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அதேபோல அமெரிக்காவின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைக்கு இது ஒரு எச்சரிக்கை என்று சீனா கூறியுள்ளது. இந்நிலையில் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் சீனாவின் 42 போர் விமானங்கள் கடந்திருக்கிறது. இந்த கோடுதான் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை கோடாக கருதப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் 42 பேர் விமானங்கள் 8 போர் கப்பல்கள் இந்த எல்லையை தாண்டி வந்திருப்பதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, “தைவானுடனான கூட்டணி தொடரும். அந்நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்யும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதற்றம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தைவான் அதிபர், “நாங்கள் அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் எங்கள் தீவை பாதுகாக்க நாங்கள் அமெரிக்காவை நம்பியிருக்கிறோம். தைவான் மக்கள் ஜனநாயகத்தை நேசிக்கின்றனர், அமைதியை விரும்புகின்றனர்” என்று கூறுியுள்ளார். ஆனாலும் இவருடைய வார்த்தைகளை சீனா பொருட்படுத்தவில்லை. எனவே தனது போர் பயிற்சியை சீனா தீவிரப்படுத்தியிருக்கிறது. தைவானுக்கு அருகில் இருக்கும் தீவுகளில் தொடர் ஏவுகணை தாக்குதல்களை சீனாவின் போர் விமானங்கள் வீசியுள்ளன. எனவே அப்பகுதி முழுவதும் கரும்புகை மேலெழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது