அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நேரு கூறியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அனுமதி பெற்று சந்தித்ததாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பணியமர்த்திய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர்.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நிலை எப்படி இருக்கிறது? – ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கம்.
கிட்டதட்ட 17 மணி நேரமாக அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து ஓமாந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ‘’செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடௌய உயர் அழுத்தம் 160/ 100 ஆக இருந்தது. இதய துடிப்பில் மாற்றம் இருந்தது. ஈசிஜியில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதய செயல்பாடுகள் இயல்பான நிலைக்கு திரும்பும் வரை ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பு தேவை. இரண்டு மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும்’’எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. உயர் சிகிச்சைகள் பெற்று வரும் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு அமலாக்கத்துறை சித்திரவதை செய்திருப்பதாக ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த விசாரணை இன்று மதியம் 2.5 மணிக்கு நடக்க உள்ளது.