தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

2 Min Read

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது. தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இடையில் மழையின் அளவு சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது. அதன்படி குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழேக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் 24ஆம் தேதி வரை (வெள்ளிக்கிழமை) 5 நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5 நாட்களுக்கு மழை

இது தவிர மேலும் சில இடங்களில் மேற்சொன்ன நாட்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (புதன்கிழமை) திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வானிலை ஆய்வு மையம்

வரும் 24ஆம் தேதி கனமழை இன்றி பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், திருவாரூர் நன்னிலம் 11 சென்டிமீட்டர், பாம்பன் 9 சென்டிமீட்டர், தங்கச்சிமடம் 8 சென்டிமீட்டர், கன்னியாகுமாரி களியல், பேச்சுப்பாறை தலா 6 சென்டிமீட்டர், சாத்தான்குளம், நீடாமங்கலம், ராமேஸ்வரம் தலா 5 சென்டிமீட்டர், திருவாரூர் கொடவாசல், கன்னியாகுமாரி சிவலோகம், கொள்ளிடம், ராமநாதபுரம் மண்டபம், திருவாரூர் பாண்டவரடி, இராமநாதபுரம் வாலிநோக்கம், புதுக்கோட்டை வம்பன் தலா 4 சென்டிமீட்டர் உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Share This Article
Leave a review