வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரையிலான நிலவரப்படி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் வட மாவட்டங்களில் சில இடங்களிலு,ம் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மழை பெய்து இருக்கிறது.
இந்த வகையில் 36 இடங்களில் கனமழை பதிவாகி இருப்பதாகவும், அதிகபட்சமாக சென்னை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும், ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக இந்த அளவுக்கு மழை கிடைத்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வியாழக்கிழமை ஆந்திரா கடலோர பகுதி ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

அதன் பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிஸா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நாளை வெள்ளிக்கிழமை செல்ல கூடும். இதன் தாக்கத்தால் இன்று முதல் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் கனமழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இதற்கிடையில் இலங்கை கடலோர பகுதிகளில் ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதன் அடுத்த கட்ட நகர்வை பொறுத்து தமிழ்நாட்டில் மேலும் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அதிகாரி கூறினார். வடமேற்கு மத்திய மேற்கு வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் 12 சென்டிமீட்டர், வேளாங்கண்ணி கோடியக்கரை தலா 11 சென்டிமீட்டர், அம்பத்தூர் சென்னை கலெக்டர் அலுவலகம், கோடம்பாக்கம் தலா 9 சென்டிமீட்டர், கத்திவாக்கம், சோழிங்கநல்லூர், மாமல்லபுரம் நாகப்பட்டினம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஆலந்தூர், அடையார், சுற்றுச்சூழல் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் 8 சென்டிமீட்டர், வேதாரண்யம், சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை, சென்னை விமான நிலையம், தேனாம்பேட்டை, திரு.வி.க நகர், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெருங்குடி, திருக்குவளை, ஒய்.எம்.சி.ஏ மைதானம், சென்னை எம்.ஜி.ஆர் நகர், பெரம்பூர், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உத்தண்டி, தரமணி தலா 7 சென்டிமீட்டர் உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.