கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பனி,வெயில் என இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அந்த வகையில் சென்னை,விழுப்புரம்,திண்டிவனம்,மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இப்போதே கோடைக்காலம் தொடங்கி விட்டது என்று நினைக்க தோன்றும் அளவுக்கு வெயில் கொளுத்தி வந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வெயில் குறைந்து மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் கூறியது போலவே இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களில் கொட்ட ஆரம்பித்தது. தலைநகர் சென்னையிலும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் இன்று கனமழை கொட்டியது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. தலைநகர் சென்னையிலும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. சென்னை பூந்தமல்லி, ஈக்காட்டுத்தாங்கல், மாங்காடு, கும்மணன்சாவடி, சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், நந்தனம், திருவில்லிக்கேனி, குன்றத்தூர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதேபோன்று சிவகங்கை, தஞ்சை, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.என தெரிவித்துள்ளது.