மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் அருண் வயது (27), கீர்த்தி வயது (27). இவர்கள் இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள். அதேபகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் வயது (20), அனீஸ் வயது (18), கல்லூரி மாணவர்கள்.

இவர்கள் 4 பேரும் கடந்த 31-ம் தேதி நடுக்குப்பத்தில் இருந்து ஒரே பைக்கில் முருக்கேரி சென்றுள்ளனர். அப்போது இவர்களது பின்னால் வந்த பாமக பிரமுகர் மாரிமுத்துவின் கார், பைக் மீது மோதியுள்ளது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற 4 பேரையும், நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர் மாரிமுத்து வயது (50), காரை ஓட்டிச் சென்ற ஐயப்பன் வயது (45) மற்றும் இவர்களுடன் சென்ற சுகுமார் வயது (40) ஆகிய 3 பேரும் வேண்டும் என திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கில் காரால் மோதியுள்ளனர்.

பின்னர் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் மாரிமுத்து, ஐயப்பன், சுகுமார் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து ஐயப்பனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதில் மாரிமுத்து மற்றும் சுகுமார் தலைமறைவாகினர். இந்த நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி நேற்று முன்தினம் காலை நடுக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே கோட்டக்குப்பம் டி.எஸ்.பி சுனில் தலைமையில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தனிப்படை போலீசார், பாமக பிரமுகர் மாரிமுத்துவின் செல்போன் சிக்னலை கண்காணித்தனர். அப்போது தஞ்சாவூர் பகுதியில் அவர் இருப்பது தெரியவந்தது.
பின்னர் தனிப்படை போலீசார் தஞ்சாவூர் விரைந்து சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்த மாரிமுத்து மற்றும் சுகுமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவரது உத்தரவின் பேரில் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

பின்னர் முதல்கட்ட விசாரணையில் மாரிமுத்து தரப்பினருக்கும், கார் மோதியதில் காயமடைந்த அருண் தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக அவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரியவந்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்ட மாரிமுத்து தரப்பினரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் முழு காரணமும் தெரியவரும்.

மேலும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஐயப்பனையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.