நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குறிப்பாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கி உள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன.
இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். மேலும் அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர்.

மேலும் குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
அப்போது விழுப்புரம் மக்களவை தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.