நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கரியா கவுண்டனூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகனை, டீக்கடைக்கு அழைத்து அவருக்கு டீ போட்டு கொடுத்து உபசரித்து திமுக தொண்டர் வழி அனுப்பி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது.

அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்டது அன்னூர் அருகே உள்ள கரியா கவுண்டனூர் கிராமம். இன்று பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் அந்த கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் டீ கடை நடத்தி வரும் திமுகவை சேர்ந்த பழனிச்சாமி என்பவர், பாஜக வேட்பாளரை எல்.முருகனை தனது கடைக்கு டீ சாப்பிட வரும்படி அழைத்தார்.
இதனை தொடர்ந்து காரில் இருந்து இறங்கி அந்த கடைக்கு சென்ற வேட்பாளர் எல்.முருகனுக்கு வடை கொடுத்ததுடன், டீ போட்டு கொடுத்து உபசரித்து திமுக உறுப்பினர் பழனிச்சாமி அனுப்பி வைத்தார்.

அப்போது டீக்கடையில் கலைஞர், ஸ்டாலின் ஆகியோரது புகைபடங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் , அந்த கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டபடி தனது வாக்கு சேகரிப்பினை தொடர்ந்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.