குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி, அசாமில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஏஏ) நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், சட்டத்தை அமல்படுத்தாமல் ஒன்றிய அரசு அமைதி காத்தது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், சிஏஏ சட்டத்தை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் அமல்படுத்துவதாக அறிவித்தது.
இதற்காக உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து டெல்லி, அசாமில் போராட்டங்கள் வலுத்துள்ளன. டெல்லி ஜமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல்கலைக்கழக நுழைவாயில் வெளியே போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே சிஏஏ அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடப்பதை தடுக்க துணை ராணுவமும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, அசாமில் லக்கிம்பூரில் அசாம் ஜாதியதாபாதி யுபா சத்ரா பரிஷத் அமைப்பினர் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.

சிஏஏ சட்டம் மூலம் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் அசாம் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என அவர்கள் கோஷமிட்டனர். இதேபோல காங்கிரஸ் கட்சியின் கவுகாத்தியில் அதன் தலைமையகத்தில் சட்டத்தின் நகல்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல இடங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையே, சிஏஏ அமல்படுத்தியதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிஏஏவை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில தலைவர்கள் கூறி உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில்;-
மேற்கு வங்கத்தில் சிஏஏவை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். சிஏஏ மற்றும் அதன் சட்ட விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் பாரபட்சமானது. இது சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையாகும்.

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் எவரும் தானாகவே சட்டவிரோதமாக குடியேறியவர்களாகி விடுவதால் அவர்கள் தடுப்பு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சிஏஏ நடைமுறைப்படுத்துவது என்ஆர்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
பாஜக தரும் வாக்குறுதிகளை தேர்தலுடன் மறந்து விடுவார்கள். நாங்கள் தான் எப்போதும் உங்களுடன் இருப்போம்’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி அளித்த பேட்டியில்;-
சிஏஏ சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதன் விதிகள் வகுக்க 5 ஆண்டுகள் ஆகியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காகவே மக்களவை தேர்தல் முன்பாக அமல்படுத்தப்பட்டிருப்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
முஸ்லிம்கள் தான் எப்போதும் பாஜகவின் இலக்காக இருக்கிறார்கள் என்றும், சிஏஏ அறிவிப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பரிசை பாஜக அளித்திருப்பதாகவும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

இந்த சட்டம் முஸ்லிம்கள் மீது பாரபட்சமான அணுகுமுறையை செயல்படுத்துவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் சிஏஏ இணைக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் வம்சாளியினர் குறிவைக்கப்படுவார்கள் என்றும் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் டி.ஒய்.எப்.ஐ அமைப்பு ஆகியோர் தரப்பில் ஒரு அவரச மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட்டு உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.