கோவை மாவட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 97% சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சுங்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கம் போல் நகரப் பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றது. உக்கடம் பஸ் டிப்போவில் இருந்து தினமும் 70 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 67 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 43 பேருந்துகளும் காலை முதல் இயக்கப்படுகின்றது.
கோவை மாவட்டத்தில் காலை 4 மணி முதல் நகர பேருந்துகள் இயக்கப்படுவதாலும் போதிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கருமத்தம்பட்டி தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ராஜேந்திரம் தெரிவித்துள்ளார். அனைத்து பணிமனைகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர பேருந்து, புற நகர் பேருந்து என அனைத்தும் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மேலும் பொதுமக்கள் பாதிப்பு அடையா வண்ணம் கருமத்தம்பட்டி கிளையில் உள்ள 43 பேருந்துகளும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர் நடத்துனர்களும் இயக்கி வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக முதல்வரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிகாலை முதல் போக்குவரத்து பணிமனைகள் முன்பாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் தீயணைப்பு துறையினரும் பணிமனையில் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் சூலூர் பணிமனையில் இருந்தும், அன்னூர் பணிமனையில் இருந்தும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றது.